Monday, September 22, 2014

வியாச மனம்-1 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)

மற்ற காவியங்கள் போலன்றி,மகாபாரதம் மறுபடி மறுபடி எழுதப்படுகிறது.காலச்சூழலின் கண்ணாடியாய்,உச்சம் தொடும் படைப்பு மனங்களின் உண்டியலாய்,மகாபாரதம் திகழ்வதாலேயே யுகந்தோறும் அதில் அபூர்வ பிம்பங்கள் பிரதிபலிக்கின்றன.அழகிய மணிகள் சேகரமாகின்றன.
நடந்து முடிந்த சம்பவங்களை ஒழுங்கமைக்கும் மேதைமை,அவற்றிலிருந்து நிலையான நீதிகளைக் கண்டுணர்ந்து உரக்க அறிவிக்கும்.வான்மீகி,வியாசர் போன்ற மகரிஷிகள் அவற்றை அநாயசமாய் செய்து முடித்தனர்.

இதிகாசங்களில் காணப்படும் சம்பவங்களை கேள்விக்குட்படுத்தத் தொடங்கும்போது,அதற்கான தர்க்க நியாயங்களில் கவனம் செலுத்தும் வாசக மனம்,காவிய அனுபவத்தை இழந்துவிடக்கூடும் என்று கருதியோ என்னவோ,அந்தப் படைப்பினால் பெறப்படும் நீதிகளை இதிகாச கர்த்தாக்களே முன்மொழிந்தனர்.

பூர்ணிமையின் பாலொளியில்,இரையெடுத்த கரிய பாம்பொன்று அசைந்தசைந்து செல்லும் காட்சிக்கு மௌன சாட்சியாய் இருக்கும் சிறுவன் ஒருவன்,அது என்ன வகை பாம்பென்னும் ஆராய்ச்சியில் ஈடுபட மாட்டான்.அந்தக் கணம்,அவனுள் அச்சம்,பரவசம்,ஆர்வம் என்று பல்வகை உணர்வுகள் மோதியெழுந்தாலும்,அவனுடைய ஆழ்மனம் அந்த அசைவை அங்குலம் அங்குலமாய் உள்வாங்கியிருக்கும்.


அதன்பின்,ஏகாந்தம் கூடும் பொழுதிலெல்லாம்,அவனுள் அந்தக் கரும்பாம்பு அசையும்.அவன் ஒருபோதும் தீண்டியிராத அந்தப் பாம்பின் சருமம் தீண்டிய நுண்ணனுபவம் அவனுக்கு வாய்க்கும்.அந்த அனுபவத் திளைப்பே அவனுக்குள் இருக்கும் ஒளிப்பாம்பை உசுப்பும்.மேல்நோக்கி நகர்த்தும்.
கண்ணிமைக்காமல் கண்ணுற்ற சிறுவனுக்குள் கரிய பாம்பின் அனுபவம் சித்திப்பது போலவே, வியாசமனம் தன் அனுபவத்தை கூர்மையான வாசகனுக்குக் கடத்துகிறது.


வியாசர் என்பது தனிமனிதர் ஒருவரின் பெயராய் ஆதியிலிருந்தது. படைப்பூக்கம் கனிந்த மனங்களுக்கான பொதுப்பெயரே வியாசர்.ஆசாரிய பீடங்கள் "வியாச பீடம்"என்றே அழைக்கப்படுகின்றன.
தன்னுடைய படைப்பாற்றலின் உச்ச கணங்களை உணரும் ஒவ்வொரு படைப்பாளியிடமும் வியாச வியாபகம் நிகழ்கிறது.


ஜெயமோகனின் "வெண்முரசு"வரிசையில் முதல்நூலான "முதற்கனல்",மகத்தான சங்கல்பமொன்றில் முகிழ்த்த முதல்கண்ணி.மூல நூலில் வரைகோடுகளாய்த் தெரிபவற்றின் விசுவரூபத்தை தீட்டும் தூரிகை.

ஒரு காவியம் முன்வைக்கும் நீதிகளின் மூலம்தேடி வடிகட்டிக் கொண்டே போனால்,அது விதி என்னும் மையப்புள்ளியில் போய் நிற்கும்.இதிகாச கர்த்தா இதனை முன்னரே தெளிவுபடுத்துவதன் நோக்கம்,விதி பின்புலத்தில் இருக்க,பாத்திரங்கள் எப்படியெல்லாம் தொழிற்படுகின்றன என்பதை உடனிருந்து பார்க்கும்  வசதியை வாசகனுக்கு வழங்குவதற்காகத்தான்.

ஆனால் தத்துவங்கள்மேல் எப்போதும் போதை கொண்ட வாசகமனம்,இந்த உத்தியை பிறழ உணர்கிறது.ஒவ்வொரு பாத்திரத்தையும் விதியின் பகடையாட்டத்தின் காய்களில் ஒன்றாகவும்,விதியென்னும் நன்னாரில் கட்டப்பட்ட தோற்பாவையாகவும் மட்டுமே காண்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் வரையறைகள் மிக்க தங்கள் எளிய வாழ்வில் நிகழும் வெற்றிகளை சாகசங்களாகக் கொண்டாடும் மனித மனம் இதிகாசங்களின் விசுவரூபங்களை விதியின் விளையாட்டென்று நகர்ந்து செல்வதோடு,"இதனால் உணரப்படும் நீதி யாதெனில்"என்னும் உபதேசத்தில் சுகம் காண்கிறது.

ஓர் இதிகாசத்துடன் உறவு கொள்ளத் தொடங்குகையில் விதிக்கோட்பாட்டைப் பின்புலத்தில் நிறுத்திவிட்டு ஒவ்வொரு பாத்திரமும் தன்னை எப்படியெல்லாம் மலர்த்திக் கொள்கிறது என்பதை அவதானித்தால் மட்டுமே இதிகாசத்தின் நுட்பங்களில் திளைக்க முடியும்.அதன்மூலம் மனித வாழ்வென்னும் பிரம்மாண்டம் புரிபடும்.

"முதற்கனல்"நூலின் தொடக்கப் பகுதியில்,மானசா தேவியிடம் சிவன் சொன்னதாய் ஜெயமோகன் எழுதும் வாக்கியம்,இந்த நுட்பத்தை உணர உதவுகிறது. "பாசிமணிகளுக்குள் பட்டுச் சரடு போல மனிதர்களுக்குள் விதியின் நோக்கம் ஊடுருவிச் செல்கிறது".(ப-18).

கண்களை உறுத்தாமல் ஊடுருவிச் செல்லும் பட்டுச் சரடை விட்டுவிட்டு,பாசிமணிகளின் அசைவையும் ஒளியையும் விகசிப்பையும் உள்வாங்கும் வாய்ப்பையும் அவகாசத்தையும் "முதற்கனல்" வழங்குகிறது.
இராமாயணத்தில் கைகேயி,விதியென்னும் பட்டுச்சரடு ஊடுருவும் பாசிமணி.இராமன் மேல் அவளுக்கிருந்த நிபந்தனையில்லாத தாய்ப்பாசம்,நிந்தனைக்குரிய துவேஷமாய் மாற விதி காரணமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

"அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
 துரக்க,நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்"

என்று கம்பர் சொல்லும் காரணத்தில் சமாதானமாகும் வாசக மனம் கைகேயியைக் கடந்து போகும் அபாயம் இருக்கிறது.கைகேயி என்னும் பொற்குடத்தில் தாய்மை எனும் பசும்பால் மெல்ல மெல்லத் திரிந்து போகும் நுண்கணங்களை உணர முடியாமல் போய்விடும்.

மகாபாரதத்தின் பாத்திரங்களை மிக நெருக்கமாய் உணரவும் உணர்த்தவும்"முதற்கனல்"நூலில் முற்படுகிறார் ஜெயமோகன்.


குருஷேத்திர யுத்தம் முடிந்து,மூன்றாவது தலைமுறையின் காலத்திலிருந்து "முதற்கனல்" தொடங்குகிறது.அபிமன்யுவின் பெயரனும்,பரீட்சித்தின் மகனுமான ஜனமேஜயன் செய்யும் யாகத்திற்கு,நாகர்குலத் தலைவியான மானசாதேவி,ரிஷிகுமாரனாகிய தன் மகன் ஆஸ்திகனை அனுப்பும் இடமே முதற்கனலின் முதல் சுடர்.

அபிமன்யு இறந்தபின் நடைப்பிணமாய் வாழும் உத்தரையின் உதரத்திலிருந்து குறைமாதப் பிள்ளையாய் தன் தந்தை பரீட்சித் பிறந்த கணம் குறித்து உத்தங்கர் ஜனமேஜயனுக்கு சொல்லும் இடத்தில் உத்தரையின் ஜீவனற்ற உயிர்ச்சித்திரத்தை ஜெயமோகன் தீட்டுகிறார்.

"ஈற்றறைக்கு வந்து குழந்தையைக் கண்டதுமே கிருஷ்ணன் புரிந்து கொண்டான்.அதன் அன்னையின் துயரமெல்லாம் தேங்கிய சிமிழ்போலிருந்தது குழந்தை.`இக்கணமே இதன் அன்னையிடமிருந்து பிரிக்க வேண்டும்.ஒருதுளி தாய்ப்பால் கூட இது அருந்தக் கூடாது`
என கிருஷ்ணன் சொன்னான்".(ப-30)

  உயிருள்ள பிரம்மாண்டமான கடற்சிப்பியின் மாமிச வெம்மையில் வைத்து வளர்க்கப்படுவதற்காக அந்தக்குழந்தை எடுத்துச் செல்லப்படும் முன்,உத்தரை,தன் மகனை,அவன் பிறந்த கணத்தில் மட்டுமே பார்க்கிறாள்.அவளுடைய மொத்தத் துயரையும் ஒற்றைப் பத்தியில் உணர்த்துகிறார் ஜெயமோகன்."தன் உடல்நீங்கி வெளியே வந்து கிடந்த குழந்தையை உடைந்த கட்டியிலிருந்து வெளிவந்தசீழைப் பார்க்கும் நிம்மதியுடன் பார்த்தபின் கண்களை மூடி ,மெல்ல விலகிப் படுத்துக் கொண்டாள்.தன்னிலை மீளாமலேயே நான்காம் நாள் அவளிறந்து போனாள்".(ப-30)

சிப்பிக்குள் பரிசோதனை முறையில் வளர்க்கப்பட்டதாலேயே பரீட்சித் என்றழைக்கப்பட்ட அந்த மன்னன்,தன் மூதாதையர்கள் மோதி விழுந்த குருஷேத்திரத்தைக் காணும் இடத்தை "முதற்கனல்"மிக அற்புதமாய்க் காட்டுகிறது.

பரீட்சித்தால் அவமதிக்கப்பட்ட சமீக முனிவரின் மகன் கவிஜாதன் பரீட்சித்தை குருஷேத்திர பூமியில் கொண்டு வந்து நிறுத்துகிறான்.நடக்கத் தடமின்றி நரித்தடம் மட்டுமே கொண்ட குருஷேத்திர பூமியெங்கும் மண்புற்றுகளைக் காண்கிறான் பரீட்சித்.

"ஒரு புற்றை அவன் உடைத்த போது,உள்ளே ஒரு யானையின் எலும்புக்கூடு,அதன் மத்தகத்தைப் பிளந்த வேலுடன் இருக்கக் கண்டான்.பின்பு வெறி கிளம்பி,ஒவ்வொரு புற்றாக உடைத்துத் திறந்தான்.ஒவ்வொன்றுக்குள்ளும் வெள்ளெலும்புக் குவியல்களைக் கண்டான்.ஒரு தருணத்தில் திகைத்து நின்று பின்பு தளர்ந்து விழுந்தபோது அந்த மண் ஒரு குடல்போல செரித்துக் கொண்டிருப்பதன் ஒலியைக் கேட்டான்".(ப-32)

இந்த இடம் வாசகனுக்கு ஏராளமான திறப்புகளைத் தருகிறது. வாழ்வில் எத்தனையோ பரிசோதனைகளைக் காணும் நாம் ஒவ்வொருவரும் ஒருவகையில் பரீட்சித்துகள்தாம். நம் முன்னோர்களின் எலும்புகளைத் தின்று செரித்துக்கொண்டிருக்கும் இந்த பூமி ஒருநாள் நம்முடைய எலும்புகளையும் தின்னக் கேட்கும்.இந்த மௌன உபதேசத்தை இந்த குருஷேத்திரம் பரீட்சித்துகளுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கிறது.

குருஷேத்திரத்தை காட்டும் முன்னர், கவிஜாதன் சொல்லும் வாக்கியம், பரீட்சித்தின் அகங்காரத்தின்மேல் விழும் மழுவீச்சு.
"நீ குருதி மழையில் பிறந்த எளிய காளான்" என்பதே அந்த வாக்கியம்.

(தொடரும்)